LATEST NEWS
“தனியா இருக்க முடியல….” விஷம் குடித்து விட்டு மகன்களுக்கு போன் போட்ட பெற்றோர்…. பதறி வந்த பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புத்தூர் வாணிய தெருவில் வசித்து வந்தவர் விவசாயி காமராஜ் (65). இவரது மனைவி வள்ளி (59). இவர்களது இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறி வாழ்கின்றனர். இதன் காரணமாக, இந்த முதிய தம்பதியினர் மட்டும் புத்தூரில் உள்ள தங்களது இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
பெற்ற பிள்ளைகள் இருவரும் தங்களை விட்டுப் பிரிந்து தூரமாக வாழ்வதால் ஏற்பட்ட கடுமையான மனவேதனை மற்றும் விரக்தி காரணமாக, இருவரும் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் காமராஜும் வள்ளியும் வீட்டில் விஷம் அருந்தியுள்ளனர். பின்னர் தாங்கள் எடுத்த விபரீத முடிவு குறித்துச் சென்னையில் இருந்த தங்களது மகன்களுக்கு அலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளனர். பதறியடித்தபடி உடனே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு விரைந்து வந்த மகன்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த பெற்றோரை மீட்டுச் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்குச் சிகிச்சை பலனின்றி காலையில் வள்ளியும், மாலையில் காமராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இத்துயரச் சம்பவம் குறித்து ஆணைக்காரன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
