CINEMA
அமரன் படத்துக்கும் “ஓம்” படத்துக்கும் இருக்கும் அந்த சீக்ரெட் கனெக்ஷன்…தனுஷை மீட்டெடுக்குமா ‘ஓம்’? மீண்டும் உண்மைச் சம்பவத்தை கையில் எடுத்த இயக்குநர்…!
‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஓம்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. தனுஷின் 55-வது படமான இதில் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஆந்திரக் காடுகளில் செம்மரம் கடத்தியதாகக் கூறி சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பது போன்ற காட்சிகள் க்ளிம்ப்ஸில் இடம்பெற்றுள்ளதால், படத்தின் மீது ரசிகர்களுக்கிருந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இருப்பினும், 1995-ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகிப் புகழ்பெற்ற ‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பு இதற்கும் வைக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. நேற்று நடைபெற்ற பட விழாவில் இதற்கு விளக்கமளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “நான் இந்தக் கதையை எழுதும்போதே ‘ஓம்’ என்ற தலைப்பை இறுதி செய்துவிட்டேன்; இதற்குப் பின்னால் எந்தச் சர்ச்சையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார். மேலும், ‘அமரன்’ என்ற தலைப்பும் 90-களில் கார்த்திக் நடித்த படத்தின் தலைப்புதான் என்றும், தனுஷின் பல படங்களுக்கும், சமீபத்திய ‘லவ் டுடே’ போன்ற படங்களுக்கும் பழைய தலைப்புகளே சூட்டப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ‘இட்லி கடை’ தவிர்த்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கர’ உள்ளிட்ட பிற படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், ‘அமரன்’ படம் மூலம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் இணைந்திருப்பது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தைப் போலவே, உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகும் இந்த ‘ஓம்’ திரைப்படமும் தனுஷின் ரசிகர்களுக்கு ஒரு மெகா பிளாக்பஸ்டர் வெற்றியாக அமையும் என ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலோடு எதிர்பார்க்கிறது.
