CINEMA
என் மகனை வச்சு சொல்றேன்…கோபத்தை தாண்டிய பெரும் ஏமாற்றம்…பிரீத்தா, ஸ்ரீதேவிக்கு போன கிரெடிட்… வனிதாவுக்கு நேர்ந்த அநீதி… விஜயகுமார் குடும்பத்தில் மீண்டும் வெடித்த சர்ச்சை…!
நடிகை வனிதா விஜயகுமார் தனது குடும்ப உறவுகள் மற்றும் தனக்கு நேர்ந்த மனக்கசப்புகள் குறித்து அண்மையில் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் தனக்கெனத் தனி அடையாளம் வைத்திருந்தாலும், அவரது குடும்பப் பிரச்சினைகளே அடிக்கடி பேசுபொருளாகி வருகின்றன. பல ஆண்டுகளாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் அவர், இந்த முறை கோபத்தை வெளிப்படுத்தாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் ஏற்பட்ட மனவேதனையை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பேட்டியில், தனது அக்கா அனிதா விஜயகுமாரின் பிரசவ காலத்தின்போது தான் உடனிருந்து கவனித்துக் கொண்டதாக வனிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனிதா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அந்தச் சமயத்தில் பிரீத்தா விஜயகுமார் தான் தன்னை முழுமையாகப் பார்த்துக்கொண்டார் என்று கூறியது தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக வனிதா வருத்தப்பட்டுள்ளார். தான் செய்த உதவிக்கான அங்கீகாரமும் புகழும் எப்போதுமே பிரீத்தா அல்லது ஸ்ரீதேவிக்கே கொடுக்கப்படுவதாகவும், உண்மை என்னவென்று சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தும் ஏன் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள் என்று புரியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தன் மகனுடன் இப்போது பேசவில்லை என்றாலும், அவன் செய்த நல்ல விஷயங்களை மற்ற மகள்கள் செய்ததாகக் கூறி அவனது உழைப்பைத் தான் மறுக்க மாட்டேன் என்று குறிப்பிட்ட வனிதா, அதே போன்றதொரு வலியைத்தான் இப்போது தானும் அனுபவிப்பதாகக் கூறியுள்ளார். வனிதாவின் இந்த ஆதங்கத்தைக் கண்ட ரசிகர்கள், குடும்பத்தில் எத்தனைப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒருவர் செய்த உதவிக்கான அங்கீகாரத்தை மறுப்பது ஆகப்பெரும் துரோகம் என்றும், இந்த முறை அவரது பேட்டியில் கோபத்தை விட ஏமாற்றத்தின் வலியே அதிகமாகத் தெரிகிறது என்றும் அவருக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
