LATEST NEWS
“ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை…” தமிழக தவெக அரசின் புதிய நிர்வாக முறையை வியந்து பாராட்டிய ZOHO ஸ்ரீதர் வேம்பு…!!
தென்காசி மாவட்டம் கோவிந்தபேரி கிராமத்தில் ஏழை எளிய மாணவர்களுக்காகத் தாம் நடத்தி வரும் “கலைவாணி கல்வி மையம்” என்ற இலவசப் பள்ளிக்கு, தற்போதைய தவெக ஆட்சியில் எவ்வித ஊழலும் இன்றி மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாகத் Zoho நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு பாராட்டியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் இதுபோன்ற இலவச கல்வி நிலையங்களுக்குக் கூட குறிப்பிட்ட நிதி கோரப்பட்டதாகவும், அதுவே ஒரே வழி என்று அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். தற்பொழுது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெளிப்படையான நல்ல மாற்றத்திற்காக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்களை எவ்வித முறைகேடுகளும் இன்றி இணையவழியில் மட்டுமே வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் கடந்த வாரம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் 848 பள்ளிகளுக்குப் புதிய அனுமதிக் கடிதங்களை வழங்கிய அவர், ஜூலை 1, 2026 முதல் தொடர் அங்கீகாரம் மற்றும் தடையில்லாச் சான்று (NOC) உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படும் என்றும், இனி தகுதியே ஒரே அளவுகோல் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இடைத்தரகர்களுக்கோ அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கோ கல்வி நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகக் கொடுக்கத் தேவையில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
