LATEST NEWS
நான் தான் கொலை செய்தேன்… கடன் சுமையால் விபரீதம்…மனைவியைக் கழுத்தை நெரித்தும்.. 9-ஆம் வகுப்பு மகளைச் சுத்தியலால் அடித்தும் கொன்று.. தொழிலதிபர் தற்கொலை..!!!
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 45 வயதுடைய சந்தோஷ். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்துள்ளார். சமீப காலமாக தொழிலில் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக, பலரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமலும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடன் தொல்லையிலிருந்து விடுபட தனது குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள சந்தோஷ் முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று காலை தனது மனைவி சரண்யாவை கழிவறைக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகள் சாத்விகாவை வீட்டிற்கு அழைத்து வந்து, சுத்தியலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தனது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று, வேகமாக வந்த லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு முன்பாக சந்தோஷ் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றை போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், கடன் சுமை அதிகரித்ததால் மனைவியையும் மகளையும் தானே கொன்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது தாயையும் கொலை செய்ய நினைத்து முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது மனைவியின் வங்கிக் கணக்கில் இருக்கும் 45 லட்ச ரூபாயை எடுத்து கடனை அடைக்குமாறு கூறி சில நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
