LATEST NEWS
பகீர்..! தூங்கிக்கொண்டிருந்த மகன் மீது தீ வைத்து கொளுத்திய தந்தை…. நள்ளிரவில் நடந்த கொடூரம்… போலீசில் வாக்குமூலம்… தூத்துக்குடியை நடுங்கிப்போச்சு…!!
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தாளமுத்து என்பவரது மகன் அருள்ராஜ் (32). டிரைவராகப் பணியாற்றி வந்த அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது பெற்றோரைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்தியதுடன், அக்கம் பக்கத்தினரிடமும் வம்புக்குச் சென்றுள்ளார். மேலும், விடுமுறைக்காகத் தன் வீட்டிற்கு வந்திருந்த சகோதரியின் குழந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு குடும்பத்தினர் அவரைப் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து 3 மாதங்கள் சிகிச்சை அளித்தபோதிலும், அங்கிருந்து திரும்பிய அருள்ராஜ் மீண்டும் தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்குள் பெரும் நரகத்தை ஏற்படுத்தி வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்றிரவும் அருள்ராஜ் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் மிகக் கடுமையான வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை தாளமுத்து, மகனை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டு கதவைப் பூட்டிவிட்டு உள்ளே உறங்கச் சென்றுள்ளார். இருப்பினும், நீண்ட நாட்களாக அருள்ராஜ் கொடுத்து வந்த மன உளைச்சலாலும் ஆத்திரத்தாலும் தூக்கம் வராத தந்தை, இன்று அதிகாலை வீட்டின் வாசலில் குடித்துவிட்டுப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில், அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார்.
மகனைக் கொன்ற பிறகு தந்தை தாளமுத்து நேரடியாக அருகில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு அதிகாலையிலேயே சென்று, தன் மகனைத் தீ வைத்துக் கொன்றுவிட்டதாகக் கூறி வாக்குமூலம் அளித்துச் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கருகிய நிலையில் இருந்த அருள்ராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாளமுத்துவை முறைப்படி கைது செய்துள்ள காவல்துறையினர், இந்த கொடூரக் கொலைக்குத் தொடர் குடும்பத் தகராறு தான் காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சொத்துப் பிரச்சினைகள் போன்ற மறைமுகக் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
