CRIME
CHATGPT-யில் “என் குடும்பத்தை கொல்வது எப்படி?” எனத் தேடிய இந்திய வம்சாவளி சிறுவன்… அமெரிக்காவையே உலுக்கிய இரட்டைக் கொலை கொடூரம்…!!
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது தாய் மற்றும் தம்பியைத் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டன் நகரில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் என்ற அந்தத் பதின்ம வயது சிறுவன், கடந்த செவ்வாய்க்கிழமை தனது சொந்த இல்லத்திலேயே இக்கொடூரத்தைச் செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் அவரது தாய் சுதா வெங்கடேசன் (45) மற்றும் தம்பி சித்தார்த் அரவிந்த் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரக் குற்றம் அரங்கேறிய விதம் குறித்துப் போலீசார் விவரித்துள்ளனர். சம்பவத்தன்று மாலை வழக்கமாக வீட்டிற்கு வரும் ஒரு பயிற்சி ஆசிரியர் , வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சிறுவனின் தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளார். தந்தை காவல்துறையை அணுகி, அவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாயின் உடல் நிலவறையிலும் , தம்பியின் உடல் முதல் தளத்திலும் கடுமையான காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. கொலைகளைச் செய்துவிட்டுத் தாயின் காரை எடுத்துக்கொண்டு தப்பியோடிய அர்ஜுனை, காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேலாண்ட் பகுதியில் வச்சு கைது செய்தனர்.
இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் நடந்துள்ள காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அர்ஜுன் அரவிந்த் கடந்த சில நாட்களாக இணையதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியை பயன்படுத்தித் தனது குடும்பத்தினரைக் கொல்வது போன்ற கற்பனைக் கதைகள் மற்றும் கோட்பாடுகளைத் தேடி வந்துள்ளார். “கோதிக் நாவல்” போன்ற பாணியில் கதைகளை உருவாக்கவும், கதாபாத்திரங்களை வடிவமைக்கவும் அவர் இந்த ஏஐ செயலியைப் பயன்படுத்தியதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அரவிந்த் மீது இருவேறு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப உறுப்பினர்கள் மீதான வன்கொடுமை, வாகனத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மைனர் சிறுவனாக இருந்தாலும், இந்த இரட்டைக் கொலை வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மீதான வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பெரியவர்களுக்கான கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
