LATEST NEWS
“பைக்கை தொட்ட குழந்தை.. பிச்சைக்காரப் பெண்ணை செருப்பால் அடித்து எட்டி உதைத்த கொடூரம்..!” கோயில் வாசலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்..!!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள மாதா ஸ்ரீ பத்ரகாளி கோவிலுக்கு வெளியே அமர்ந்திருந்த ஏழைப் பிச்சைக்கார பெண் மீது நபர் ஒருவர் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுடன் இருந்த சிறு குழந்தைகள், கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், அப்பெண்ணைத் தரையில் தள்ளி காலணியால் தாக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலை அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பாதசாரிகள் தடுக்க முயன்றபோதிலும், அந்த நபர் மீண்டும் வந்து அப்பெண்ணை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாக்குதலுக்கு ஆளான பெண் பயத்தின் காரணமாக ஆரம்பத்தில் புகாரளிக்க வராத நிலையில், மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. துணைக் காவல் கண்காணிப்பாளர் ஷீத்தல் சிங் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் கோவிலுக்கு எதிரே கடை நடத்தி வரும் ஷேக்குபூரைச் சேர்ந்த விகாஸ் சர்மா என்பது தெரியவந்தது. அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
