LATEST NEWS
மனைவியின் கொடூர விபரீதம்..! கடன் தொல்லையிலிருந்து தப்ப கணவனுக்கு ஸ்கெட்ச்…! கணவனைத் தீர்த்துக்கட்ட காதில் விஷம் ஊற்றிய மனைவி… தம்பியுடன் சேர்ந்து கொடூர செயல்..!!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வீட்டில் இல்லாத நிலையில், தம்பதியினர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ரவிச்சந்திரன் தனது குடும்பத்திற்காகப் புதிதாக வீடு கட்டியுள்ளார். இதற்காகப் பல்வேறு நபர்களிடமும், தனியார் நிதி நிறுவனங்களிலும் அவரது பெயரில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
வாங்கப்பட்ட அனைத்துக் கடன்களும் ரவிச்சந்திரனின் பெயரிலேயே இருந்ததால், இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்க அவரது மனைவி உமாராணி ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். கணவரைக் கொலை செய்துவிட்டால் கடனில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணிய அவர், தனது தம்பி ஞானசேகரனுடன் சேர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே ரவிச்சந்திரனின் உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதிலிருந்து உயிர் தப்பிய ரவிச்சந்திரன், அதன் பிறகு வீட்டில் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன் வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் உமாராணியும் அவரது தம்பியும் சேர்ந்து ரவிச்சந்திரனின் காதில் விஷத்தை ஊற்றியுள்ளனர். காதில் ஏற்பட்ட கடுமையான எரிச்சலால் விழித்தெழுந்த அவர், மனைவியைத் தள்ளிவிட்டு வீட்டை விட்டுத் தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு கோவிலில் தஞ்சமடைந்தார். விடிந்த பிறகு அங்கிருந்தவர்களின் உதவியுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், உமாராணி மற்றும் அவரது தம்பி ஞானசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
