LATEST NEWS
நள்ளிரவில் பயங்கரம்…! ஆற்று மணல் பகை… திமுக பிரமுகர் துடிதுடிக்க வெட்டிக்கொலை… காரில் வந்த மர்மக்கும்பல் யார்..? மதுரையில் அதிர்ச்சி…!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றிய திமுக முன்னாள் இளைஞரணி செயலாளரான கலாநிதி (35), மணல் அள்ளும் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் நள்ளிரவில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ஹரிஹரன் மற்றும் உறவினர் அஜித்துடன் இருசக்கர வாகனத்தில் குராயூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சோளம்பட்டி குதிரை கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு பொலிரோ கார் திட்டமிட்டபடி அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் கீழே விழுந்தவுடன், காரில் இருந்து கத்தி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் இறங்கியது. இதைக்கண்டு அச்சமடைந்த நண்பர் ஹரிஹரன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடித் தப்பினார். அதன் பின் அந்த ஆயுதக் கும்பல் கலாநிதியை நாலாபுறமும் சுற்றி வளைத்து, அவரது முகம், கழுத்து, கை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கக் கொலை செய்தது. மேலும், கலாநிதியைக் காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் அஜித்துக்கும் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் விரைந்து வந்து, கலாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அஜித்தும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாகக் கலாநிதிக்கும் உள்ளூரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதமே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தப்பியோடிய கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
