LATEST NEWS
அடப்பாவிகளா..! யூனிஃபார்ம் போட்டா கண்டுபிடிக்க மாட்டாங்களா..? ரூ.5.6 லட்சம் கஞ்சாவுடன் மாட்டிய ‘Gen-Z’ ஜோடி..! ஜபல்பூரில் வெளிவந்த ஷாக்கிங் உண்மை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், கல்லூரி மாணவர்கள் போல வேடமிட்டு பள்ளிப் பைகளில் கஞ்சா கடத்திய 19 வயது இளம்பெண் மற்றும் அவரது 22 வயது ஆண் நண்பரை குற்றப்பிரிவு மற்றும் பார்கி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கை முறை, பிராண்டட் உடைகள், விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் மேக்கப் செலவுகளுக்காகக் குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க விரும்பிய இவர்கள், காவல் துறையினருக்கு சந்தேகம் வராமல் இருக்க பள்ளி உடையில் கல்லூரி மாணவர்கள் போல வேடமிட்டு இக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ரகசியத் தகவலின் பேரில் ஆகஸ்ட் 11 அன்று பார்கி பைபாஸ் பகுதியில் உள்ள ‘சாய் டீ ஸ்டால்’ அருகே காத்துக்கொண்டிருந்தபோது காவல் துறையினர் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜபல்பூரைச் சேர்ந்த ஹிமான்ஷு பாவாரியா மற்றும் சந்தியா சரோதே என அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களின் நீல நிறப் பள்ளிப் பைகளை சோதனையிட்டபோது, துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பெரிய கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 11 கிலோ 184 கிராம் ஆகும்; சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.5,59,200 என மதிப்பிடப்பட்டுள்ளது. காவல் துறையினர் இவர்களிடம் இருந்த 11 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா, இரண்டு கம்பளிகள் மற்றும் ஒரு மொபைல் போனைப் பறிமுதல் செய்து, NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ‘Gen-Z’ ஜோடிக்கு கஞ்சாவை சப்ளை செய்த முக்கிய நபர் யார் மற்றும் இதனை யாருக்கு விநியோகிக்கக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
