LATEST NEWS
BREAKING: “எடப்பாடி பழனிசாமி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்” -எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குச் சொந்தமான மாவட்டங்களை விடுத்து, வேறு மாவட்டங்களில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தலைமை அறிவித்ததை ஏற்றுக்கொள்ள இயலாது என்று அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் இருவர் பகிரங்கமாக முரண்பட்டிருப்பது கட்சியின் உள்விவகாரங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இருப்பினும், அதிமுக நடத்தும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தங்களது முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும், ஆனால் கள ரீதியாகப் போராட்டத்தில் நேரடியாகத் தங்களால் கலந்துகொள்ள முடியாது என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். தவெக அரசுக்கு எதிரான இந்த அரசியல் நகர்வில், தங்களது சொந்த மாவட்டங்களிலேயே போராட்டங்களை நடத்த அனுமதிக்காமல் மாற்று மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமித்ததே இவர்களின் இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அதிமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
