LATEST NEWS
“அங்கு போனா ஏமாற்றம்தான் மிஞ்சும்” தவெக-வுக்கு தாவியவர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் அதிரடி எச்சரிக்கை… “திரும்பி வந்தா தாய் உள்ளத்தோடு ஏற்போம்” என உருக்கம்..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவிலிருந்து ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்புக்காகவும் சுயநலத்திற்காகவும் சிலர் விலகித் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவ்வாறு பதவி ஆசையில் தவெகவிற்குச் சென்றவர்களுக்கு அங்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் என்று அவர் மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் நினைத்த பதவியோ அல்லது எதிர்பார்த்த காரியங்களோ கிடைக்காமல் ஏமாற்றமடைந்து அவர்கள் மீண்டும் திரும்பி வரும்பட்சத்தில், அதிமுக அவர்களைத் தாய் உள்ளத்தோடு அரவணைத்துக் கொள்ளும் என்று உருக்கமாகத் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுக்கட்சியினர் பலர் அங்கு இணைந்து வரும் சூழலில், ஆர்.பி. உதயகுமாரின் இந்த உரை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
