LATEST NEWS
என் குடியை கெடுத்தால்… சும்மா விடமாட்டேன்..! பள்ளி மாணவர்களின் குடிநீரில் மனித கழிவு… தொட்டிக்குள் ஒட்டப்பட்ட மிரட்டல் கடிதம்..! அய்யலூர் பள்ளியில் பகீர் சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் பள்ளியின் மாடியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் கவரில் மனிதக்கழிவைக் கலந்துள்ளார். மேலும், “என் ஒரு குடியை கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகள் குடியையும் கெடுத்து விடுவேன். சும்மா விடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை” என்று மிரட்டல் வாசகங்கள் அடங்கிய துண்டுச்சீட்டு ஒன்றையும் அத்தொட்டியில் ஒட்டிச் சென்றுள்ளார். நேற்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் வடமதுரை போலீசார் விரைந்து வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், தொட்டியில் இருந்த தண்ணீர் மருத்துவக் குழுவினரால் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளி தலைமையாசிரியை சந்திரபிரபா அளித்த புகாரின் அடிப்படையில் வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, இந்த அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்ட மர்ம நபரைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட இச்சம்பவம் தங்கம்மாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
