“2 வருசமா மனசுக்குள்ளே எரிஞ்ச நெருப்பு” செம்பட்டி வாலிபர் சங்கிலி முருகன் கொலையில் திடுக்கிடும் திருப்பம்… 3 பேர் கூண்டோடு கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

“2 வருசமா மனசுக்குள்ளே எரிஞ்ச நெருப்பு” செம்பட்டி வாலிபர் சங்கிலி முருகன் கொலையில் திடுக்கிடும் திருப்பம்… 3 பேர் கூண்டோடு கைது..!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) என்ற திருமணமான குடும்பஸ்தர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி செப்டம்பர் 10-ம் தேதி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சங்கிலி முருகனைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியசெல்வம் (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்தான் சங்கிலி முருகனைத் திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

போலீசாரின் தொடர் விசாரணையில், இந்த கொடூரக் கொலைக்கான பின்னணி அம்பலமானது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியசெல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதமும், அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாக்கியசெல்வம், சங்கிலி முருகனைப் பழிவாங்கத் துடித்து, தனது நண்பர்களான முருகன் (42), மருதுபாண்டி (44) உட்பட 4 பேருடன் சேர்ந்து கொலை செய்ய ஒரு காரிய பிளான் தீட்டினார். திட்டமிட்டபடி, சங்கிலி முருகனை நைசாகப் பேசி காரில் கடத்திச் சென்று, திண்டுக்கல் – கொடைரோடு சாலை அருகே வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

Advertisement

அதன் பின்னர், கொலையை மறைப்பதற்காக சங்கிலி முருகனின் சடலத்தை அண்டை மாவட்டமான மதுரைக்குக் கொண்டு சென்றுள்ளனர். திருமங்கலம் அருகே உச்சப்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில், பயன்பாட்டில் இல்லாத ஒரு கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிக்குள் உடலை வீசிவிட்டுத் தப்பியோடினர். பாக்கியசெல்வம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் மற்றும் திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அழுகிய நிலையில் இருந்த சங்கிலி முருகனின் சடலத்தை மீட்டனர். தற்போது பாக்கியசெல்வம் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in