CINEMA
“ஆளுங்கட்சி டூ எதிர்க்கட்சி… பதவிகள் ராஜினாமா” தமிழக அரசியலை மீண்டும் சீண்டுகிறதா பிக்பாஸ்..? அடுத்த புரோமோவால் வெடித்த புது சர்ச்சை..!!
விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ்’ சீசன் 10 அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதன் புதிய புரோமோ மீண்டும் ஒரு அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியின் முதல் வார வீகெண்ட் எபிசோடில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி தலைமைத்துவம் குறித்துப் பேசுகையில், “வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, பிரச்சனை வரும்போது எதிர்க்கட்சி மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைமைப் பண்பல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக முதல்வர் விஜய்யை விமர்சிப்பது போல் இருப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்தச் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது புரோமோவில் மற்றொரு அரசியல் விவகாரம் கன்டென்ட் ஆக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தப் புரோமோவில், “ஆளும் அணியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்குத் தாவுவதாகவும், சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாகவும்” போட்டியாளர்கள் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த புரோமோ காட்சிகள், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலை அச்சு அசலாகப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில வேட்பாளர்கள், பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக ஆளும் கட்சியில் இணைந்த சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியிருந்தன.
இதனைத் தான் பிக்பாஸ் புரோமோ மறைமுகமாக விமர்சிக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், இந்த வாரம் வரவிருக்கும் வீகெண்ட் எபிசோடில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த அரசியல் கட்சித் தாவல் கன்டென்ட் குறித்து வெளிப்படையாகப் பேசுவாரா அல்லது வழக்கம் போல கடந்து செல்வாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
