LATEST NEWS
“செலவைப் பத்தி யோசிக்காதீங்க…” வீடும் போச்சு… திருமணப் பொருட்களும் போச்சு..! ஆனால், மாமனார் சொன்ன அந்த ஒரு வார்த்தை… நெகிழ வைக்கும் நிஜ சம்பவம்..!!
பீகாரின் பெட்டியாவில் பகுதியில் கண்டக் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சம்பாரண் கரை உடைந்து, பிந்தேஷ்வரி தாஸ் என்பவரின் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காங்கிரீட் வீடு மற்றும் அவரது மகள் ராகினிக்கு வரவிருக்கும் நவம்பர் மாத திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த துணிமணிகள், பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வீடிழந்து, உடமைகளை இழந்து கரைப் பகுதியில் பிளாஸ்டிக் ஷீட் அமைத்துத் தங்கி வரும் பிந்தேஷ்வரி தாஸுக்கு, மகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என்ற பெரும் கவலையும் மனஉளைச்சலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், பெண்ணின் மாமனார் மனிதநேயத்துடன் பிந்தேஷ்வரி தாஸைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். இயற்கை சீற்றத்தின் மீது யாருக்கும் கட்டுப்பாடில்லை எனக் கூறிய அவர், “இப்போது திருமணச் செலவு மற்றும் ஏற்பாடுகள் குறித்து கவலைப்பட வேண்டாம்; வெள்ள நீர் வடிந்து சூழ்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, இரண்டு குடும்பங்களும் ஒன்றாக அமர்ந்து திருமணத்திற்கான புதிய தேதியைத் தீர்மானிப்போம்” என்று உறுதியளித்தார். சம்பந்தியின் இந்த அன்பான வார்த்தைகள், அனைத்தையும் இழந்து தவித்த பிந்தேஷ்வரிக்கு பெரும் நம்பிக்கையையும் மன அமைதியையும் அளித்தன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த எம்பி பப்பு யாதவ், கரையோரம் தங்கியிருந்த பிந்தேஷ்வரி தாஸை நேரில் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்து, உடனடி நிவாரணமாக ரூ.10,000 நிதியுதவி வழங்கி, புதிய வீடு கட்டுவதற்கும் உதவுவதாக உறுதியளித்தார். மேலும், பீகார் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அமித் கிரி, ராகினியின் திருமணச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். வெள்ளம் ஒரு குடும்பத்தின் சேமிப்பையும் வீட்டையும் அழித்தபோதிலும், உறவினர்களின் ஆறுதலும் மக்களின் உதவியும் அக்குடும்பத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
