LATEST NEWS
ஒரு பைக் மோதியதால் இவ்வளவு பெரிய கலவரமா..? காவடியா வேடத்தில் இருந்த போலீஸாரைத் தாக்கிய கும்பல்…! மீரட் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் தௌராலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டெல்லி-தேராடூன் நெடுஞ்சாலையில், ஹரித்வாரில் இருந்து கங்காதீர்த்தம் எடுத்துக்கொண்டு தங்களது இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு ‘காவடியா’ குழுக்களுக்கு இடையே இருசக்கர வாகனம் மோதியதில் திடீர் மோதல் ஏற்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சண்டை, சாதாரண வாய் தகராறில் தொடங்கி விரைவிலேயே கடுமையான கைக்கலப்பாக மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தௌராலா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பையும் அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை கண்காணிப்பதற்காகக் காவடியா உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹெட் கான்ஸ்டபிள் தினேஷ் என்பவரை, எதிர்த்தரப்பைச் சேர்ந்த நபர் எனத் தவறாகப் புரிந்துகொண்ட உக்கிரமடைந்த காவடியார்கள் சிலர், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அவர் மீது தாக்குதல் நடத்தினர். வாகனத்தில் இருந்த போலீஸ்காரருடன் தள்ளுமுள்ளு மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகள் வைரல் வீடியோவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதலில் காயமடைந்த சோனு, ஆயுஷ், சாகர், விகாஸ் மற்றும் குட்டு ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த ஒரு பைக் மற்றும் ஒரு ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் இருந்தவர்களை தவறாகப் புரிந்துகொண்டதாலேயே காவடியார்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், தற்போது அப்பகுதியில் நிலைமை முற்றிலும் அமைதியாகவும் கட்டுக்குள்ளும் இருப்பதாக நகர எஸ்பி விநாயக் போஸ்லே தெரிவித்துள்ளார். மேலும், வைரல் வீடியோவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
