LATEST NEWS
“பெற்றோர்களே உஷார்…! மூளையைத் தாக்கும் கொடிய ‘சாந்திபுரா வைரஸ்’… 22 குழந்தைகள் பலியானதால் அதிர்ச்சியில் குஜராத்..!!”
குஜராத் மாநிலத்தில் பருவமழைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் அபாயகரமான சாந்திபுரா வைரஸ் பாதிப்பால் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, காய்ச்சல் அறிகுறிகளுடன் பதிவான 184 சந்தேகத்திற்குரிய வழக்குகளில் 35 குழந்தைகளுக்குச் சாந்திபுரா வைரஸ் தொற்று இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் என்பதால் மாநிலம் முழுவதும் கடும் பீதி நிலவுகிறது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பன்சீரியா, “மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழந்தைகள் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காந்திநகர், ராஜ்கோட், ஹிமத்நகர், பவநகர் மற்றும் பதான் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிவில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் குழந்தைகளுக்குச் சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் அதிநவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மணல் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்தச் சாந்திபுரா வைரஸ், மூளையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்திப் உயிரைப் பறிக்கும் ஆபத்து கொண்டது. திடீர் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். குழந்தைகள் உடனடியாகப் பல உறுப்புகள் செயலிழப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்க, தனியார் மற்றும் அரசு குழந்தை மருத்துவமனைகள் அனைத்து சந்தேகத்திற்குரிய வழக்கையும் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டுக் கால்நடைகள் வளர்க்கப்படும் பகுதிகள் மற்றும் வீடுகளின் இடுக்குகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும், மண் வீடுகளின் சுவர்களில் உள்ள பிளவுகளை அடைக்குமாறும், குழந்தைகளுக்குத் திடீர் காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் சுகாதாரத் துறை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
