LATEST NEWS
அவருக்கு ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க சார்… காலைக் கடனைக்கூட முடிக்காம எப்படி வெளியில வருவாரு..? போலீசாரிடம் அவகாசம் கேட்ட மனைவி கிருத்திகா..!!
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில், நள்ளிரவு முதல் விடிய விடிய நீடித்த கைதுப் படலம் இன்று காலை உச்சகட்டப் பதற்றத்தை எட்டியுள்ளது. காவிரி உரிமைப் போராட்டப் பேச்சு தொடர்பாக உதயநிதியைக் கைது செய்ய, சென்னை காவல் துறை இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற வாரண்ட் இன்றி அவசர அவசரமாகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போலீசாரை மறித்து நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சூழலில், போலீசாரின் பிடிவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆணையர் விஜயகுமாரிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கிருத்திகா, “அவருக்கு ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க, காலைக்கடனைக்கூட முடிக்காமல் உதயநிதியால் எப்படி உடனடியாக வெளியே வர முடியும்?” என்று கேட்டு முறையிட்டார். நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அடிப்படை மனிதாபிமான அடிப்படையிலாவது சில நிமிடங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மா. சுப்பிரமணியனும் அங்கு வாதிட்டார்.
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இணை ஆணையர் விஜயகுமார், “10 நிமிஷம் 10 நிமிஷம்னு எவ்ளோ நேரம்தான் சொல்லுவீங்க? உடனே வந்து அவரை கைதாகச் சொல்லுங்க. உதயநிதியை முறைப்படி கைது பண்ணாமல் நாங்கள் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம்” என மிகவும் கறாரான தொனியில் எச்சரித்தார். கிருத்திகா மற்றும் மா. சுப்பிரமணியனுடன் காவல்துறை அதிகாரி நடத்திய இந்த நேரடிப் பேச்சுவார்த்தையும், காரசாரமான விவாதங்களும் நீலாங்கரை இல்ல வளாகத்தில் உச்சகட்டப் பரபரப்பைக் கிளப்பியுள்ளதுடன், எந்தக் கணத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
