“அரசியல்ல கடுமையா விமர்சிச்சேன்… ஆனா நேரில் என்கிட்ட முதல்ல கேட்டதே இதான்..!” முதல்வர் விஜயை பாராட்டித் தள்ளும் நடிகர் கருணாஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியல்ல கடுமையா விமர்சிச்சேன்… ஆனா நேரில் என்கிட்ட முதல்ல கேட்டதே இதான்..!” முதல்வர் விஜயை பாராட்டித் தள்ளும் நடிகர் கருணாஸ்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய்யை ஆரம்பக்காலத்தில் கடுமையாக விமர்சித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், தற்போது முதலமைச்சர் விஜய்யின் பெருந்தன்மையான குணத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக மாபெரும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக விஜய் அரசியல் கட்சி தொடங்கியபோது, அவருக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது உள்ளிட்ட பல கடுமையான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கருணாஸ், ‘திருமலை’ பட சமயத்தில் இருந்தே விஜய்யுடன் தமக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “நான் விஜய்யை அரசியல் ரீதியாகப் பலமுறை கடுமையாக விமர்சித்திருந்தாலும், சமீபத்தில் நடிகர் சங்கத்தின் சார்பாக அவரைப் பார்க்கச் சென்றபோது, என் மீதான எவ்வித கோபமும் இன்றி ‘உங்க பையன் எப்படி இருக்கார்?’ என்றுதான் அவர் முதலில் நலம் விசாரித்தார்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அரசியல் வேறு, தனிப்பட்ட உறவு வேறு என்பதை விஜய் நிரூபித்துள்ளதாகக் கூறிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தங்களது தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஒருவர் முதலமைச்சராகி இருப்பதும், சங்கத்திற்காக விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதும் பெருமைக்குரியது என்று பாராட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in