LATEST NEWS
“எங்களை ஏமாத்தி சுரண்டுகிறார்கள்” அமெரிக்காவில் ரூ.85,000; இந்தியாவில் வெறும் ரூ.35.. மருந்து விலையைப் பார்த்து அதிர்ந்த அமெரிக்கப் பெண்…!!
அமெரிக்காவில் 85,000 ரூபாய்க்கு விற்கப்படும் இரத்தப் புற்றுநோய் மருந்தான ரெவ்லிமிட் (Revlimid), இந்தியாவில் வெறும் 35 ரூபாய்க்குக் கிடைப்பதாக இந்தியாவில் வசிக்கும் லிஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்களை ஏமாற்றிச் சுரண்டுவதாகவும், அதே நேரத்தில் இந்தியா தனது மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் தரமான சுகாதாரச் சேவைகளை வழங்குவதாகவும் அவர் அந்த வீடியோவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, இரு நாடுகளின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்து விலைகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்காவில் இந்த மருந்தின் ஒரு மாத்திரையின் விலை 900 டாலர் (சுமார் ₹85,000) ஆகும்; ஆனால், இந்தியாவில் இதன் ஜெனரிக் மாற்று மருந்து வெறும் 35 ரூபாய் முதல் 300 ரூபாய்க்குள்ளாகவே கிடைக்கிறது என லிஸ் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த பயனர்கள் பலர், அமெரிக்க மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை விமர்சிப்பதோடு, அமெரிக்க நோயாளிகள் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்று, 10-15 நாட்கள் சுற்றுலா சுற்றிவிட்டுச் சென்றால் கூட அவர்களுக்குப் பணம் மிச்சமாகும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaSs9GIJfDl/?utm_source=ig_web_button_share_sheet
கடந்த மாதமும் விக்டோரியா என்ற மற்றொரு அமெரிக்கப் பெண்மணி, அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பை ஒரு ‘பெரிய ஏமாற்று வேலை’ என்று சாடியிருந்தார். அவருக்குத் தேவையான ஒரு மருந்திற்கு அமெரிக்காவில் 1,000 டாலர் (சுமார் ₹84,000) கட்டணம் கோரப்பட்ட நிலையில், அதே மருந்தை அவர் ஒரு இந்திய நிறுவனத்திடமிருந்து நேரடியாக ஆர்டர் செய்தபோது, அது அவருக்கு வெறும் 25 டாலரில் (சுமார் ₹2,400) கிடைத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் மலிவான மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஜெனரிக் மருந்து உற்பத்தியின் முக்கியத்துவத்தை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளன.
