LATEST NEWS
ரொம்ப நாள் ரேஷன் பொருள் வாங்கவில்லையா..? அப்போ உடனே போங்க… ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் குடும்ப அட்டையாளர்கள் நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான அனைத்து மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முடக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பொருட்களை வாங்கத் தவறினால், அந்த குடும்ப அட்டைகள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு பெயர்கள் நீக்கப்படும் அபாயமும் உள்ளது.
உங்களது ரேஷன் கார்டு தற்பொழுது செயல்பாட்டில் உள்ளதா அல்லது முடக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொதுமக்கள் மிக எளிதாக இரண்டு வழிமுறைகளில் அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்குரிய பகுதி நியாயவிலைக் கடைக்கு (Ration Shop) நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் சரிபார்த்துக் கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘TNPDS’ போர்ட்டல் (tnpds.gov.in) அல்லது மொபைல் செயலி மூலமாக உள்நுழைந்து தங்களது அட்டை தற்பொழுது எந்த நிலையில் (Active or Inactive) உள்ளது என்பதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஆன்-டைமில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இதற்கிடையில், நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கும் புதிய வசதியும் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது கைரேகையைப் பதிவு செய்யக் கடைக்கு வர வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குரிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அனைத்தும் அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகக் கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
