LATEST NEWS
கண்ணீரில் கால்பந்து உலகம்..! 2026 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுகிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ..? சகோதரி வெளியிட்ட ‘பகீர்’ தகவல்..!!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உலகெங்கிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரே அவர் போர்ச்சுகல் நாட்டின் ஜெர்சியில் விளையாடும் கடைசித் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அதிரடித் தகவலை ரொனால்டோவின் சகோதரி காடியா அவீரோ ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “அவர் விளையாடுவதை இன்னும் சில காலம் மட்டுமே நாம் பார்க்க முடியும், அது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, சர்வதேச கால்பந்து அரங்கில் இதுவே அவரது ‘கடைசி நடனம்’ (Last Dance) ஆகும்” என்று மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், போர்ச்சுகல் கால்பந்து வரலாற்றில் ரொனால்டோவின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் அவர் தனது சகோதரருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தற்போது 41 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக அதிகப் போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்களை அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார். அவரது தலைமையில் போர்ச்சுகல் அணி யூரோ கோப்பை (Euro 2016) மற்றும் நேஷன்ஸ் லீக் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பையிலும் அவர் பல புதிய மைல்கற்களை எட்டி வரும் வேளையில், அவரது சகோதரியின் இந்த அறிக்கை ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து சகாப்தம் முடிவுக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
