LATEST NEWS
அடப்பாவிங்களா..? மேக்கப் போட்டுட்டு வர்றேன்.. கணவனை பியூட்டி பார்லர் வாசலில் உட்கார வைத்த புதுப்பெண்… சமோசா சாப்பிட்டுக்கொண்டிருந்த மாப்பிள்ளை… திருமணமான இரண்டே நாளில் காத்திருந்த ஷாக்..!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில், புதுப்பெண் ஒருவர் அழகு நிலையம் செல்வதாகக் கூறிவிட்டு மாயமான விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பரேலா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஜூன் 21 அன்று திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில், தம்பதியினர் புகைப்படம் எடுப்பதற்காக ஸ்டுடியோவிற்குச் சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக, தான் மேக்கப் செய்து கொண்டு வருவதாகக் கூறிவிட்டு அந்தப் பெண் அருகில் இருந்த அழகு நிலையத்திற்குள் சென்றுள்ளார்.
அப்போது, தனது மனைவி 10-15 நிமிடங்களில் வந்துவிடுவதாகக் கூறியதால், கணவர் கௌதம் யாதவ் அருகில் இருந்த ஒரு கடையில் அமர்ந்து சமோசா சாப்பிட்டுக் கொண்டே அவருக்காகக் காத்திருந்துள்ளார். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மனைவி திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவர், அழகு நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். மேலும், தனது மாமியார் வீட்டிற்கும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அங்கும் அவர் வரவில்லை என்பது தெரியவந்தது. காணாமல் போனபோது அந்தப் பெண் சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தனது மனைவி நகைகளுடன் தன் காதலனுடன் ஓடிப் போயிருக்கலாம் என்று கணவர் கௌதம் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோசல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன புதுப்பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்தப் பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் யாருடனாவது சென்றாரா அல்லது அவர் காணாமல் போனதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
