LATEST NEWS
“தாஜ்மகாலை மிஞ்சிய காதல் இதுதான்” மூட்டு வலியால் தவித்த மனைவிக்காக… 20 நாளில் எஸ்கலேட்டர் செய்த 5-ம் வகுப்பு படித்த விவசாயி… இப்படியொரு காதலா.? பாராட்டித்தள்ளும் இணையவாசிகள்..!!
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், பொறியியல் படிப்போ அல்லது முறையான தொழில்நுட்ப பயிற்சியோ இல்லாத போதிலும், தனது மனைவியின் சிரமத்தைக் குறைக்க இந்த புதுமையான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.
பெரிய ஜவுளிக்கடைகளில் உள்ள எஸ்கலேட்டர்களைப் பார்த்து ஈர்க்கப்பட்ட இவர், தனது சொந்த முயற்சியால் சுமார் 300 கிலோ எடையைத் தாங்கும் வகையில் இந்த சாதனத்தை வடிவமைத்துள்ளார். சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மூலம் இதனை அமைக்க சில லட்சங்கள் செலவாகும் என்ற நிலையில், இவர் வெறும் 70 ஆயிரம் ரூபாய் செலவில் மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான முறையிலும் இதனை உருவாக்கியுள்ளார்.
கணவரின் இந்த அதீத அன்பினாலும், பாசத்தினாலும் உருவாக்கப்பட்ட எஸ்கலேட்டர் மூலம் தற்போது அவரது மனைவி எவ்வித வலியும் இல்லாமல் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறார். காதலின் சின்னமாக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை விட, ஒரு சாதாரண விவசாயி தன் மனைவிக்காகத் தயாரித்துள்ள இந்த ‘ எஸ்கலேட்டர்’ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு, பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
