LATEST NEWS
“சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த செந்தில் பாலாஜி” ரூ.35 கோடி குதிரை பேர விவகாரம்.. அதிர்ச்சியில் அலறும் அறிவாலயம்..!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம், தற்பொழுது குதிரை பேர சர்ச்சைகளால் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும், அதற்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவுகிறது. இந்த அரசியல் பலவீனத்தைப் பயன்படுத்தி, சட்டமன்றச் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்க்க அல்லது முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்பொழுது வெடித்துள்ளது.
இந்தக் குதிரை பேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட்டிருப்பது, தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியைச் சீரமைக்க முயன்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்திப் பேரம் பேசியதாகப் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது, அறிவாலய வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், திமுகவிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலப் போக்குவரத்துத்துறை ஊழல் வழக்கு, திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் டாஸ்மாக் துறைகளில் கூடுதல் வசூல் புகார்கள் எனச் செந்தில் பாலாஜியைச் சுற்றிப் பல சர்ச்சைகள் நிலவி வந்தன. தற்பொழுது தவெக எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்ற வழக்கில் அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருப்பது, ஆளும்கட்சியான தவெகவிற்கும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் ஒரே நேரத்தில் திமுகவை எதிர்க்கப் பெரிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. கைதானவர்களுக்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் விசாரணையில் அம்பலமாகி வருவதாகத் தவெக அமைச்சர் நிர்மல்குமாரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வலுப்படுத்த வேண்டிய இக்கட்டான நேரத்தில், இந்த ‘எம்.எல்.ஏ பேரம்’ சர்ச்சை திமுகவின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்பி விட்டதாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். மற்றொரு புறம், செந்தில் பாலாஜியின் விசுவாசிகள் அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற இதுபோன்ற காய்நகர்த்தல்கள் இயல்பானவை என்று முட்டுக் கொடுத்து வாதிடுகின்றனர். எனினும், சென்னை போலீசாரின் இந்த அதிரடி விசாரணைப் பாய்ச்சல், திமுகவின் இமேஜை பொதுவெளியில் டேமேஜ் செய்துள்ளதுடன் அறிவாலயத்தை உச்சக்கட்டப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
