LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் காட்சி…! புனேவில் ஸ்கூட்டரில் சென்ற முதியவர் மீது திடீரென சரிந்து விழுந்த மரம்… வைரல் வீடியோ..!!
புனேவின் பிம்பிள் சௌதாகர் பகுதியில் சனிக்கிழமை காலை, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். விபத்து நடந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது தற்போதைய பருவமழை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குணால் ஐகான் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கு வெளியே உள்ள குணால் ஐகான் சாலையில் நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர் அதே பகுதியில் உள்ள துவாரகாதீஷ் குடியிருப்பில் வசித்து வரும் எஸ். என். குடாலே என்ற முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரம் அவர் மீது விழுந்ததில், அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜீவன் ஜோதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து ஒரே வழியில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறுகலான சாலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் மழை காரணமாக இப்பகுதி ஏற்கனவே ஆபத்தானதாக மாறியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதோடு, வானிலை மையம் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ள நிலையில் இத்தகைய விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
