உஷார்..! நடுரோட்டில் திடீரென நிற்கும் இ-ரிக்ஷாக்கள்…! பின்னணியில் இருக்கும் ஆபத்தான புளூடூத் சைபர் மோசடி..!!! – cinefeeds
Connect with us

CRIME

உஷார்..! நடுரோட்டில் திடீரென நிற்கும் இ-ரிக்ஷாக்கள்…! பின்னணியில் இருக்கும் ஆபத்தான புளூடூத் சைபர் மோசடி..!!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்கள் நடுரோட்டில் திடீரென நின்றுவிடும் விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. சில மர்ம நபர்கள் புளூடூத் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் செயலி மூலம், சாலையில் சென்று கொண்டிருக்கும் இ-ரிக்ஷாக்களின் செயல்பாட்டைத் தூரத்திலிருந்தே முடக்கி விடுகின்றனர். சில இளைஞர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும் இவ்வாறு செய்வதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சில இடங்களில், முடக்கப்பட்ட இ-ரிக்ஷாவை மீண்டும் இயங்க வைக்க ஓட்டுநர்களிடம் ரூ.100 முதல் ரூ.150 வரை பணம் கேட்டு மிரட்டிப் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்தத் திடீர் முடக்கங்களால் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். பயணம் பாதியில் நின்று போவதால் பயணிகள் அதிருப்தியடைந்து இறங்கிச் சென்றுவிடுகின்றனர். இதனால் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதைவிட முக்கியமாக, மேம்பாலங்களில் ஏறும் போதோ அல்லது வேகமான போக்குவரத்து உள்ள சாலைகளிலோ இ-ரிக்ஷாக்கள் திடீரென முடக்கப்படும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதிப் பெரிய அளவிலான சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர் மனிஷ் கோயல் கூறுகையில், ‘BAT BMS’ என்பது அடிப்படையில் பேட்டரி மேலாண்மை அமைப்பை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சீன செயலியாகும் . இதன் புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி இ-ரிக்ஷாக்களின் பேட்டரியை லாக் செய்கின்றனர். இதுபோன்ற சந்தேகத்திற்குரிய செயலிகளைப் பயன்படுத்துபவர்களின் சொந்த மொபைல் தரவுகள் மற்றும் வங்கி விவரங்களும் திருடப்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, இந்தச் செயலிக்கு முழுமையாகத் தடை விதிப்பதோடு, தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in