CRIME
“பாத்ரூமை பார்த்தாலே அலறி ஓடுறாங்க!” பெங்களூரு குழந்தைகள் காப்பக சித்திரவதை.. பெற்றோர் கண்ணீர் வாக்குமூலம்..!!
பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள கேப்கெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘லிட்டில் ஸ்காலர்ஸ்’ என்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் , குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தில் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை மிகவும் கொடூரமாக நடத்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு வீடியோவில், சிறுமி ஒருத்தி பாத்ரூமிற்குள் பூட்டப்பட்டு “அம்மா, அம்மா” என்று அழுதுகொண்டே கதவின் கீழ் இருக்கும் இடைவெளி வழியாக எட்டிப் பார்க்கும் நெஞ்சை உலுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 55 வயதான விஜயலட்சுமி என்ற பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு பராமரிப்பாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மையத்தில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்திருந்த பெற்றோர்கள் தங்களின் வேதனையைப் பகிர்ந்துள்ளனர். அழுதுகொண்டே இருந்ததற்காகக் குழந்தைகளைப் பாத்ரூமிற்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததால், தங்களின் குழந்தைகளுக்குப் பாத்ரூம் மற்றும் கழிவறைகளைக் கண்டாலே அலறிக்கொண்டு ஓடும் அளவிற்குப் பயம் ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கேப்கெமினி நிறுவனம், தங்களுக்குக் குழந்தைகளின் பாதுகாப்பே மிக முக்கியம் என்றும், இந்தத் தனியார் டே-கேர் மையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இக்குற்றச்சாட்டுகளுக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
