CRIME
சென்னையில் பயங்கரம்: ரூ.1 கோடி சொத்துக்காக தாயையும், பல் மருத்துவரான தம்பியையும் கழுத்தை நெரித்துக் கொன்ற 2 அண்ணன்கள்…!!
சென்னை அண்ணா நகர் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துத் தகராறு காரணமாக இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் தங்களது சொந்தத் தாயையும், மற்றொரு சகோதரரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசித்து வந்த அஷ்ரஃப் நிஷா என்ற பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். இவரது மகன்களில் ஒருவரான அஷ்ரஃப் அகமது என்பவர் பல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மற்ற இரு சகோதரர்களான அஷர் அகமது மற்றும் அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்து தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு, இவர்களுக்குள் மீண்டும் சொத்துத் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த அஷர் அகமதும் அப்ரார் அகமதும் சேர்ந்து தங்களது தாய் அஷ்ரஃப் நிஷா மற்றும் சகோதரர் அஷ்ரஃப் அகமது ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு தங்களது குற்றத்தை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், தங்களது தாயும் சகோதரரும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடினர்.
இத்தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதை அடுத்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போலீசார் உடல்களைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் இரண்டு குற்றவாளிகளும் காவல்துறையினரிடமும் அதே பொய்க் கதையைக் கூறி ஏமாற்ற முயன்றனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருவரின் உடல்களிலும் கடுமையான காயங்கள் இருப்பது உறுதியானது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், இரு சகோதரர்களும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
