CRIME
டீச்சர்ஸோட அலட்சியம்தான் காரணம்..! 5-ஆம் வகுப்பு சிறுவன் அடித்துக்கொலை… தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் சஸ்பெண்ட்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் விபான் என்ற ஐந்தாம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகள் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பஹார்பூர் சுத்வர் கிராமத்தைச் சேர்ந்த வீரு காஷ்யப் என்பவரின் மகனான விபான், வழக்கம்போல் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றுள்ளான். ஆனால், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட எதிர்பாராத தகராறு, திடீரெனக் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதில் மற்ற மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் விபான் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளான். உயிருக்குப் போராடிய அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
விபானின் மரணச் செய்தி பரவியதை அடுத்து, அவனது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி வாசலில் திரண்டு, அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் கல்வித் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கடமை தவறிய தலைமை ஆசிரியர் மற்றும் அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
