LATEST NEWS
“படுக்கையே ஆபீஸா மாறிடுச்சு, குளிக்கவே சாயங்காலம் ஆகுது” WORK FROM HOME வேளையில் அவஸ்தையை உடைத்துப் பேசிய பெண்.. நெட்டிசன்களைக் கவர்ந்து வைரலாகும் இன்ஸ்டா வீடியோ..!!
வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை பலருக்கும் வசதியாகக் கருதப்பட்டாலும், அதன் யதார்த்த நிலை முற்றிலும் வேறானது என்பதைப் பெண் ஒருவர் நகைச்சுவையான வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஹனி சிங் என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், வீட்டிலிருந்து வேலை செய்வதால் அலுவலகப் பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான எல்லை கோடு முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் ஓய்வெடுக்கவோ, முறையான அன்றாட வழக்கத்தைப் பின்பற்றவோ நேரம் கிடைப்பதில்லை என அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
தனது அன்றாட வேலைப்பளுவைக் குறித்துப் பேசிய அவர், காலையில் கண் விழித்த உடனே லேப்டாப் முன் அமர வேண்டியுள்ளதாகவும், அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களால் உண்பதற்குக்கூட நிலையான நேரம் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். குளிப்பது போன்ற மிக அடிப்படையான தினசரி காரியங்களைக் கூட மாலை நேரத்தில் தான் செய்ய முடிகிறது. மேலும், வீட்டிலுள்ள படுக்கையிலேயே சாய்ந்துகொண்டும், அசௌகரியமான நிலைகளிலும் அமர்ந்து வேலை செய்வதால் தனக்குத் தீராத முதுகுவலி ஏற்பட்டுவிட்டதாகவும், இவ்வளவு வேலை செய்தாலும் யாரும் தனது வேலையை மதிப்பதோ அல்லது தீவிரமாக எடுத்துக்கொள்வதோ இல்லை என்றும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
வீட்டு வேலைக்கும் அலுவலக வேலைக்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்ட அவர், அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வதே சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். அலுவலகத்தில் முறையான மதிய உணவு நேரம், சிறிய இடைவெளிகள் மற்றும் சக ஊழியர்களுடன் அரட்டை அடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, வேலை நேரம் முடிந்தவுடன் லேப்டாப்பை மூடிவிட்டு வந்துவிடலாம். ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது படுக்கையே அலுவலகமாக மாறிவிடுவதாகக் கூறி, தனது அலுவலக வாழ்க்கையே தமக்கு மீண்டும் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
