LATEST NEWS
“அப்பா.. நான் நாயை கூட்டிட்டு போறேன், நீங்க வாங்க” நாய் மேல் வைத்த பாசத்தால் பறிபோன இளம் உயிர்… அசாம் வெள்ளத்தில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, சிவசாகர் மாவட்டத்தின் பாமுன்புகுரி தேயிலைத் தோட்டப் பகுதியில் தனது செல்ல நாய்க்குட்டியைப் பாதுகாக்க முயன்ற சிறுவன் ஒருவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கடந்த ஜூலை 19 அன்று, குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தபோது, ஹிரிதீப் என்ற சிறுவன் தனது மூன்று மாதமே ஆன ‘வருண்’ என்ற செல்ல நாய்க்குட்டியைப் பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் செல்ல முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் அவன் அடித்துச் செல்லப்பட்டான்.
இந்தக் கொடுரமான விபத்து குறித்து அச்சிறுவனின் தந்தை நெகிழ்ச்சியுடன் பேசுகையில், “வெள்ள நீர் வேகமாக உயர்ந்ததால் மகனை அவனது மாமா வீட்டிற்குச் செல்லுமாறு கூறினேன்; அதற்கு அவன், ‘அப்பா, நான் வருணையும் என்னுடன் கூட்டிச் செல்கிறேன், நீங்களும் சீக்கிரம் வாருங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றான்” எனத் தெரிவித்தார். முக்கிய ஆவணங்களை எடுப்பதற்காகத் தந்தை வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களில் வெள்ளத்தின் வேகம் பலமடங்கு அதிகரித்துள்ளது. உறவினர்கள் ஓடிவந்து உதவ முயன்றபோதிலும், நீரோட்டத்தின் வேகத்தில் வழுக்கி விழுந்த சிறுவனை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. எனினும், அந்த நாய் உயிர் பிழைத்துத் தற்போது குடும்பத்தினருடன் உள்ளது.
மகனை இழந்து தவிக்கும் அவனது தாய், “வெள்ளக் காலங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியாக விடாமல் தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும்; எங்களைப் போல வேறு எந்தப் பெற்றோருக்கும் இந்த நிலை வரக்கூடாது” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்குத் துரிதமாக மீட்புப் படைகளும், படகுகளும் சென்றடையும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அரசுக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அசாமின் கிழக்குப்பகுதிகளில் இந்த மாதம் ஏற்பட்ட இந்த பெருவெள்ள பாதிப்புகளால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
