LATEST NEWS
என் அம்மாவை திட்டினாலும் பரவாயில்ல… நான் உங்களை மன்னிக்கிறேன்… ஜந்தர் மந்தர் அவதூறு வீடியோவுக்கு பிரதமர் மோடி உருக்கம்.. “வழக்கு, தண்டனை வேண்டாம்” பிள்ளைகளுக்கு நல்வழி காட்டுவோம் என நெகிழ்ச்சி…!!
டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தன்னைப்பற்றியும் தனது மறைந்த தாயாரைப் பற்றியும் அவதூறாகப் பேசிய இளைஞர்களைத் தான் மன்னிக்க விரும்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஜந்தர் மந்தரில் நடந்ததை நாடும் உலகமும் பார்த்தது. வழிதவறிய சில இளைஞர்கள் நாகரிகச் சமூகத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். என்னை வசைபாடினர், எனது தாயாரையும் இழிவுபடுத்தினர். ஆனாலும், இதற்குக் கோபமோ அல்லது பழிவாங்கும் உணர்ச்சியோ தீர்வாகாது” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 23 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது, 25 வயது பெண் ஒருவர் பிரதமருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட நடவடிக்கை குறித்துப் பேசிய பிரதமர், “இளமைக் காலத்தில் தவறுகள் நடப்பது இயல்புதான். சமூகத்தில் கோபம் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இப்போது அந்தப் பிள்ளைகளை அரவணைத்து அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய நேரமே தவிர, அவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்து அலைக்கழிப்பதோ சூழ்நிலையை மாற்றிவிடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DbdzX-2ztBV/?utm_source=ig_web_button_share_sheet
“திட்டுகளாலும் வசவுகளாலும் எதற்கும் தீர்வு காண முடியாது; வழிதவறியவர்களை நல்வழிப்படுத்தி, பாரத நாட்டிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்” என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, இந்தப் பெண் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ பதிவு செய்யப்பட்டு, டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குப்பதிவிற்குப் போராட்டக் குழுவின் சார்பாகக் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
