LATEST NEWS
“அந்தப் படத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க” ஸ்பெயின் அகதிகள் ஊடுருவலைக் காட்டி அமெரிக்காவை மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. “டெமாக்ரடிக்ஸ் ஜெயிச்சா உங்க கதி இதுதான்” என அதிரடி எச்சரிக்கை..!!
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான ‘சியூட்டா’ எல்லையில் ஏற்பட்டுள்ள கடுமையான அகதிகள் ஊடுருவல் நெருக்கடியை, அமெரிக்காவிற்கான ஒரு எச்சரிக்கை மணியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். மொராக்கோ நாட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சிறிய எல்லையான சியூட்டாவிற்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் திடீரென பெருமளவில் நுழையும் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த புகைப்படங்களையும் காட்சிகளையும் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், “அந்தப் படத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; வரவிருக்கும் தேர்தல்களில் தவறான தரப்பு ஆட்சிக்கு வந்தால், இன்னும் மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவின் நிலையும் இதுவாகத்தான் இருக்கும்” என்று ஃபாக்ஸ் நியூஸ் ஊடக நேர்காணலில் எச்சரித்துள்ளார்.
வரவிருக்கும் அமெரிக்க இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, டிரம்ப் நிர்வாகம் இந்த சர்வதேசப் பிரச்சினையைத் தங்களது உள்நாட்டு அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. டொனால்ட் டிரம்ப் கடந்த 2024 அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் நிலவிய கட்டுப்பாடற்ற சட்டவிரோதக் குடியேற்றங்கள் குறித்த மக்களின் கவலையே மிக முக்கியக் காரணமாக அமைந்தது. தற்போது டிரம்பின் ஆதரவு விகிதம் 30 சதவீத அளவுக்குச் சரிந்துள்ள சூழலில், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றத் துடிக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராக, தங்களின் வலுவான ஆயுதமான ‘எல்லைக் கட்டுப்பாட்டு’ விவகாரத்தை குடியரசுக் கட்சியினர் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, டிரம்பின் முக்கிய அரசியல் கூட்டாளிகளும் தங்களது சமூக வலைதளங்களில் ஸ்பெயின் எல்லை நிலவரத்தை தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “மேற்கத்திய நாடுகளின் மீதான இந்த ஆக்கிரமிப்பிற்கு இடதுசாரி உலகமயமாக்கல் கொள்கைகளே காரணம் என்பதை ஸ்பெயின் காட்சிகள் நமக்கு நினைவூட்டுகின்றன” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், டிரம்பின் தீவிர குடியேற்ற எதிர்ப்பு கொள்கை வகுப்பாளரான ஸ்டீபன் மில்லர், “ஜனநாயகக் கட்சியினர் உங்கள் வீடுகளை ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்” என்று கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.
