LATEST NEWS
“முதல்வர் விஜய் நேரில் வர வேண்டும்..! நாங்கள் வேலைதானே கேட்கிறோம்..!” லயோலா மணியை வளைத்துப்பிடித்து தூய்மைப் பணியாளர்கள் சரமாரி கேள்வி..!!
சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரிப்பன் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, போராட்டம் நடைபெற்ற பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். மேலும், முதல்வர் விஜய் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தண்டையார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து, “உங்களுக்குப் போராடுவதற்கான இடம் மற்றும் வசதிகள் செய்து தரப்படும்; உங்களில் ஒருவனாக உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் பேசிக்கொண்டிருந்தபோதே அவரைச் சுற்றி வளைத்த தூய்மைப் பணியாளர்கள், “முதல்வர் விஜய் இங்கே நேரில் வர வேண்டும். நாங்கள் வேலைதானே கேட்கிறோம்; வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு நம்பிக்கையற்ற வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கிறோம்” என்று வேதனையுடன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து லயோலா மணி, “ஒத்துழைப்பு கொடுங்கள், நாளை முறையான அனுமதியுடன் ரிப்பன் மாளிகையில் போராடுவதற்கான சூழலை உறுதியாக உருவாக்கித் தருகிறோம்” எனத் தெரிவித்தார். இருப்பினும், தங்களது முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தங்களைச் சந்தித்து உறுதியான தீர்வு வழங்க வேண்டும் என்பதில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளனர்.
