LATEST NEWS
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி..! காகிதத்தில் மட்டுமே இயங்கிய அரசு மருத்துவமனை.. 87 ஊழியர்க்ள்.. 6 ஆண்டுகளாக நடந்த நூதன மோசடி அம்பலம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட அரசு பொது மருத்துவமனை ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருவதாக அரசு ஆவணங்களில் காட்டப்பட்டு வந்துள்ளது. ஆனால், உண்மையில் அங்கு அப்படி ஒரு மருத்துவமனையே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனைக்காக இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை என்றும், அதற்கான நிலம் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதும் ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
கட்டடமே இல்லாத இந்த ஆஸ்பத்திரிக்கு 87 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, ஆள்சேர்ப்பு மற்றும் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 80 ஊழியர்கள் பிற இடங்களில் தற்காலிகமாகப் பணியாற்றி வருகின்றனர். துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா, நிலம் கிடைக்காததால் கட்டடப்பணி தாமதமானதாகக் குறிப்பிட்டு, பணியாளர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பாஜக அரசிடம் கேள்விகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
