LATEST NEWS
முட்டையால் வந்த ஆபத்து…! ரூ. 1.5 லட்சம் செலவிலும் வளர்ப்புப் பறவையின் உயிரை மீட்கப் போராடும் சிறுமி..!!
மேற்கு வங்க மாநிலம் கொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஷ்யாம் லால் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மிது’ என்ற பெண் கிளியை வளர்த்து வருகிறார். அவரது பேத்தியான தியா, அந்த கிளியுடன் மிகுந்த பாசத்தோடு பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களாக மிது எந்தவித சத்தமும் எழுப்பாமல், உணவும் உட்கொள்ளாமல் மிகவும் அமைதியாக இருப்பதை சிறுமி தியா கவனித்துள்ளார். இதனால் கவலையடைந்த அவர், தனது தாத்தாவை வற்புறுத்தி கிளியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு கிளியை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடலில் முட்டை சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அந்த முட்டையின் அளவு பெரியதாக இருந்ததால், அது இயற்கையாக வெளியே வர வாய்ப்பில்லை என்றும், உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கிளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்தனர். பறவைகளின் உடலில் கால்சியம் படிவதால் ஏற்படும் இந்த பாதிப்பு மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் மருந்துகள் மூலம் முட்டையை அகற்ற முயன்றும் அது பலனளிக்கவில்லை. அங்கு இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சை செய்வதற்கான நிபுணர்கள் இல்லாததால், கிளியை டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் இதற்கான மருத்துவ நிபுணர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இருப்பினும், டெல்லி மருத்துவர்கள் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மாற்று வழியில் முட்டையை வெளியேற்றி அதன் உயிரைக் காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
