DISTRICT NEWS
“என்னது.. இவர்தான் ஜட்ஜ்-ஆ?”.. சைக்கிளில் வந்து நீதிமன்ற ஊழியர்களை மிரள வைத்த 53 வயது நபர்.. கோவை நீதிமன்றத்தில் நடக்கும் நெகிழ்ச்சியான உண்மை..!!
கோவை 5-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பி.கே. சிவகுமார் (53) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது அசாத்திய எளிமையால் பாமர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த இவர் சேலம், மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் கீழ் நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட்டாகவும், சார்பு நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த காலத்திலிருந்தே நீதிமன்றத்திற்குச் சைக்கிளில் வந்து செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று கோவைக்கு வந்த பின்னரும், தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் தினமும் சைக்கிளிலேயே நீதிமன்றத்திற்குப் பயணித்து வருகிறார்.
தினமும் வீட்டிலிருந்து சைக்கிளில் வரும் நீதிபதி சிவகுமார், மதிய உணவையும் கையேடு கொண்டு வந்துவிடுகிறார். மதிய உணவு நேரத்தில் நீதிபதிகளுக்கான தனி அறையில் அமர்ந்து சாப்பிடாமல், நீதிமன்ற ஊழியர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதிகளுக்குப் பின்னால் வரும் ‘டவாலி’ உடன் வருவதைத் தவிர்த்து, எப்போதும் தனியாகவே நடந்து செல்கிறார். இத்தகைய ஆடம்பரமற்ற, நேர்மையான மற்றும் எளிமையான நீதிபதியின் செயல்பாடு கோவை மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
