LATEST NEWS
உஷார் மக்களே..! ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் காலாவதியான உணவுகள் விநியோகமா..? FSSAI அதிரடி நடவடிக்கை..!
ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் விநியோக தளமான ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவுகளை விநியோகித்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் பதிவிட்ட இந்தத் தொடர் புகார்களை அடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்திற்கு 9 நோட்டீஸ்களை அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (2006)-ஐ மீறும் வகையில் அமைந்துள்ளதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களில், வே புரோட்டீன் மற்றும் மெட்ராஸ் மிக்சர் போன்ற தின்பண்டங்கள் அவற்றின் காலாவதி தேதி முடிந்த பிறகும் விநியோகிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், ஒரு வாடிக்கையாளருக்கு அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசும் ஆர்கானிக் முட்டைகளும், மற்றொருவருக்கு உண்ணத் தகுதியற்ற முறையில் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசிய பரோட்டாக்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மின்னணு வர்த்தகப் பொருட்கள், மனிதர்களுக்குப் பதிலாக ‘பாட்ஸ்’ எனப்படும் தானியங்கி செயலிகள் மூலம் கையாளப்படுவதாலேயே இதுபோன்ற தவறுகள் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம், உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து ஒரு விரிவான விளக்கம் மற்றும் இணக்க அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் FSSAI தெரிவித்துள்ளது. ஒருவேளை உரிய விளக்கத்தை அளிக்கத் தவறினால், அந்நிறுவனத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
