LATEST NEWS
“ரூ.100 கோடி அசுர மோசடி…” தனியார் பள்ளிகளை அலறவிட்ட… திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார்.. அதிரடி கைது பின்னணி..!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் பிரபல அரசியல்வாதியும் கல்வி நிறுவனருமான பி.டி. அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவைச் சேர்ந்த இவர், சென்னை சாலிகிராமத்தில் வசித்துக் கொண்டு ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பு ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்கட்டமைப்பு அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் நில அனுமதி போன்ற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவதில் தனியார் பள்ளிகள் சந்தித்த சிக்கல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தனது அரசியல் செல்வாக்கு மூலம் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பல நூறு கோடிகளை இவர் வசூலித்துள்ளார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரான இளங்கோவன் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த அதிகாரப்பூர்வப் புகாரின் அடிப்படையிலேயே இந்த அசுர மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசகுமாரும் அவரது கூட்டாளிகளும் பல கோடி ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு, சொன்னபடி எந்தவொரு அரசு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை பொருளாதாரக் குற்ற ஆவண மோசடி தடுப்புப் பிரிவின் உதவி ஆணையர் செந்தில் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, போதிய ஆதாரங்களுடன் அரசகுமாரைக் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
பி.டி. அரசகுமாரின் இந்தக் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்திலும் கல்வித் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த மோசடியின் விஸ்வரூபம் தற்போதுதான் தெரியவந்துள்ள நிலையில், அரசகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மற்ற தனியார் பள்ளி நிர்வாகங்களும் எவ்வித அச்சமுமின்றி சென்னை மத்திய குற்றப்பிரிவை அணுகிப் தைரியமாகப் புகார் அளிக்கலாம் என காவல்துறை அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
