LATEST NEWS
பள்ளிகளில் அரசியலா?… கோஷம் போட்ட மாணவர்கள்… த.வெ.க-வுக்கு எதிரான வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரமசிவம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். கல்வி நிறுவனங்களில் தேசிய தலைவர்களின் படங்களோடு கட்சித் தலைவரின் புகைப்படங்களை வைப்பது, மாணவர்களைக் கொண்டு அரசியல் ரீதியான கோஷங்களை எழுப்பச் செய்வது மற்றும் சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்வது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிலையங்களை அரசியலுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் த.வெ.க. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, இதே விவகாரத்திற்காகத் தொடர்ந்து பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கல்வி நிறுவனங்களில் எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது எனத் தடை விதித்து, கடந்த 10-ஆம் தேதியன்றே அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார். அரசின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்ததால், நீதிமன்றம் அந்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
