“ஆக்சிஜன் இல்லை… ஆம்புலன்ஸும் இல்லை… அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்..! சார்க்கண்ட் சுகாதாரத் துறையைக் உலுக்கிய மரணம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆக்சிஜன் இல்லை… ஆம்புலன்ஸும் இல்லை… அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பறிபோன உயிர்..! சார்க்கண்ட் சுகாதாரத் துறையைக் உலுக்கிய மரணம்..!!”

Published

on

சார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஷிவானி குமாரி, திடீர் உடல்நலக்குறைவு மற்றும் முறையான மருத்துவ வசதி கிடைக்காததால் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அவருக்கு, திடீரென கடுமையான தலைவலியும் தொடர் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை செயன்பூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மாணவிக்கு முறையான முதலுதவி சிகிச்சை அளிக்காமல், கும்லா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மாணவியின் நிலைமை மோசமடைந்ததால், கும்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடனடியாக அரசு ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு அவரது பெற்றோர் கெஞ்சியுள்ளனர். ஆனால், அங்கிருந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளதாகவும், அது ஸ்டார்ட் ஆகவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி ஆம்புலன்ஸுக்காக சுமார் இரண்டு மணி நேரம் பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. நிலைமை மிக மோசமானதைத் தொடர்ந்து, ஒரு தனியார் பிக்-அப் வாகனத்தை வாடகைக்கு எடுத்து, ஆக்சிஜன் போன்ற எந்தவொரு அடிப்படை மருத்துவ வசதியும் இல்லாத நிலையில் மாணவியை கும்லா மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

Advertisement

கும்லா மருத்துவமனைக்கு வந்தபோதும் மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மீண்டும் பரிந்துரைத்தனர். ஆனால், ராஞ்சிக்குச் செல்லும் வழியிலேயே, கும்லா நகர எல்லையைத் தாண்டியவுடன் அந்த மாணவி தனது பெற்றோரின் மடியிலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கும்லா மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷம்பு சவுத்ரி, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in