LATEST NEWS
“சீருடை எங்கே சார்..? வெறும் லூங்கியுடன் பெண்ணிடம் குறை கேட்ட ASI..! பீகார் காவல்துறையின் ஒழுக்கத்தைச் சாடும் நெட்டிசன்கள்..!!”
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள அத்மல்கோலா காவல் நிலையத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர் அஞ்சனி குமார் சிங் என்பவர், காவல் சீருடை எதுவும் அணியாமல், வெறும் லூங்கி மட்டும் கட்டிக்கொண்டு மேலாடை இல்லாமல் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அந்தச் சமயத்தில் அங்கு புகார் அளிக்க வந்த ஒரு பெண்மணியிடம் இருந்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு, அவரிடம் லூங்கி உடடையிலேயே குறை கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. கடமையின் போது முறையான சீருடை அணியாமல் காவலர் இருந்த இந்தச் செயல், காவல்துறையின் ஒழுக்கத்தை மக்கள் மத்தியில் பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மாநில அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. நிதிஷ் குமார் ஆட்சியில் காவல்துறை ஏற்கனவே சரியாக செயல்படவில்லை என்றும், தற்போது சாம்ராட் சவுத்ரி உள்துறை அமைச்சரான பிறகு பீகார் போலீஸ் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து, திமிர்பிடித்த, ஊழல் நிறைந்த மற்றும் நாகரிகமற்ற அமைப்பாக மாறிவிட்டது என்றும் ஆர்.ஜே.டி குற்றம் சாட்டியுள்ளது. முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் இப்படி இருக்கும்போது, அவர்களுக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் எப்படி ஒழுக்கமாக இருப்பார்கள் என்ற கேள்வியோடு இந்த விவகாரத்திற்கு அவர்கள் அரசியல் வண்ணம் பூசியுள்ளனர்.
இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்துப் பேசிய பாட்னா கிராமப்புற எஸ்பி குந்தன் குமார், இந்த வைரல் வீடியோ தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஏ.எஸ்.ஐ மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பொதுவாக போலீஸ் குடியிருப்பு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே இருப்பதால், காவலர்கள் சாதாரண உடையில் சுற்றுவது வழக்கம் என்றாலும், பொதுமக்கள் புகார் அளிக்க வரும்போது பணியில் இருக்கும் அதிகாரி சீருடையில் இருப்பதுதான் காவல்துறையின் கண்ணியத்திற்கும், மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும் என்பதால் இந்த விவகாரம் பீகாரில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
