LATEST NEWS
எல்லாம் இருந்தது… ஆனால் ஒரே ஒரு மெயில்..! 14 ஆண்டு அமெரிக்க வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த மெட்டா..!!!
அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து, அங்கு ஒரு நிலையான வாழ்க்கையை அமைப்பது பல இந்தியப் பொறியாளர்களின் பெருங்கனவாக உள்ளது. அவ்வாறு 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்ரீதர் வங்கா என்ற இந்தியத் தொழில்நுட்ப நிபுணர், அமேசான் மற்றும் டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, மெட்டா நிறுவனத்தில் ‘டெக்னிக்கல் புரோகிராம் மேலாளராக’ இணைந்தார். அங்கு தனது குடும்பத்துடன் ஒரு வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர் கட்டமைத்திருந்தார்.
ஆனால், மெட்டா நிறுவனம் மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஸ்ரீதர் வங்கா எதிர்பாராதவிதமாகத் தனது வேலையை இழந்தார். அமெரிக்கக் குடிவரவு விதிகளின்படி, அங்கு வேலை செய்யும் H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்களின் வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் மற்றொரு நிறுவனத்தில் புதிய வேலையைக் கண்டறிய வேண்டும்; தவறினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மெட்டாவின் இந்த திடீர் பணிநீக்கம் அவரது வாழ்வையே தலைகீழாக மாற்றியதுடன், புதிய வேலை தேடுவதற்கான விசா காலக்கெடுவும் முடிவடைந்ததால், அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதன் காரணமாக, அமெரிக்காவில் 14 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உருவாக்கிய வீடு, நண்பர்கள் வட்டம், குழந்தைகளின் கல்வி மற்றும் அழகான நினைவுகளைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, தனது குடும்பத்துடன் மீண்டும் தாய்நாடான இந்தியாவுக்கு திரும்ப ஸ்ரீதர் வங்கா முடிவு செய்துள்ளார். “ஒவ்வொரு முறையும் எனது விசா நிலை குறித்து கவலைப்படுவதில் எனக்கு சோர்வு ஏற்பட்டுவிட்டது” என்று அவர் தனது லிங்க்டின் பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த மனவேதனை நிறைந்த பதிவு, தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களிடையே விசா சார்ந்த நிச்சயமற்ற தன்மைகள் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
