LATEST NEWS
“ராமதாஸ் எங்க சாமிதான்… ஆனா இப்போ கதவை சாத்திட்டாங்க..! பாமகவை அதிர வைக்கும் அருளின் குமுறல்..!!!”
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள சூழலில், பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக கருத்துக்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அருள், “நேற்றும் இன்றும் நாளையும் ராமதாஸ் எங்களுக்கு எப்பொழுதும் கடவுள்தான்; ஆனால், தற்போது எங்களை வழிநடத்தாமல் அவர் கதவை சாத்திக்கொண்டார்” என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் காலகட்டத்திற்கு முன்பு தந்தை-மகன் இருவரும் பிரிந்திருந்தபோது, அன்புமணி விட்டுச் சென்ற பிறகும் தாங்கள் ராமதாஸுடன் உறுதியாக நின்றதாகவும், ஆனால் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்த பிறகு தங்களை ராமதாஸைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களைச் சந்திக்க விடாமல் கதவு சாத்தப்பட்டது ராமதாஸாகச் செய்ததா அல்லது மற்றவர்களால் சாத்தப்பட்டதா என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தைலாபுரம் தோட்டத்து வாசலில் நின்று இருவரும் பிரியக் கூடாது என்று கதறி அழுத தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். பனையூர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்தபோதிலும், தற்போது சில அழைப்புகளைத் தான் தவிர்த்து வருவதாகவும் அருள் தனது பேட்டியில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
