LATEST NEWS
“இது நியாயமே இல்ல!”.. டிரம்பிற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எச்சரிக்கை… வர்த்தகப் போரில் அடுத்த திருப்பம்..!!
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாகுபாடு காட்டுவதாகக் குற்றம்சாட்டி, கனடாவிலிருந்து வரும் பல்வேறு பொருட்களுக்குக் கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆம் பிரிவைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வரி விகிதங்கள் அடுத்த 30 நாட்களுக்குள் அமலுக்கு வரவுள்ளன. இதன்மூலம் ஒயின், ஐஸ் ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்பதோடு, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்களுக்கும் இந்த வரி பொருந்தும் என்பதால் இது கனடாவிற்குப் பெரும் பொருளாதார இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கனடாவின் பெரும்பாலான மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களைப் புறக்கணித்துக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்ற நிலையிலும், கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ புகை அமெரிக்காவில் பரவியது உட்பட பல்வேறு பூசல்களுக்கு நடுவிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பிற்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இது USMCA வர்த்தக ஒப்பந்தத்தின் நேரடி மீறல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், இந்த வர்த்தகச் சர்ச்சையை பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளக் கனடா தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
