LATEST NEWS
“இனி 60 நாட்கள் கெடு காலி..!” இந்திய ஐடி ஊழியர்களுக்கு விழுந்த மரண அடி.. டிரம்ப் கொடுத்த ‘அந்த’ ஒரு அதிரடி ஷாக்..!!
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எச்-1பி (H-1B) விசா சலுகைக் காலத்தை ரத்து செய்வதற்கான புதிய திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்துள்ளது. உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதியின்படி, வேலை இழந்த பிறகு புதிய வேலையைத் தேடிக்கொள்ள இதுவரை வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் கால அவகாசம் முழுமையாகப் பறிக்கப்படும். இந்த அதிரடித் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், H-1B விசா வைத்திருப்பவர்கள் தங்களது வேலை பறிபோன அடுத்த கணமே எந்தவிதமான மாற்று அவகாசமும் இன்றி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையின் கீழ் சட்டப்பூர்வக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தகவல் தொழில்நுட்பத் துறையில் H-1B விசாவைப் பயன்படுத்திப் பணிபுரியும் ஊழியர்களில் இந்தியர்களே பெரும்பான்மையாக உள்ளதால், இந்த அதிரடி முடிவு இந்திய ஐடி வல்லுநர்களுக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த விசாவை அதிகம் நம்பியிருக்கும் நிலையில், வேலை இழப்பு ஏற்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்பதால் இந்திய ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலை உருவாகியுள்ளது. எனினும், அமெரிக்கச் சட்டப்படி இந்த விதிமுறை தற்போது 60 நாட்கள் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்கேட்புக்காக விடப்பட்டுள்ளதால், அதன் பின்னரே இறுதி முடிவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
