LATEST NEWS
செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்..! முக்கிய துறைமுகத்தைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்… பீதியில் உலக நாடுகள்…!!
ஏமன் நாட்டில் சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து முக்கிய செங்கடல் துறைமுக நகரமான மொகாவை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் சனா உள்ளிட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள், ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிக முக்கியமான கடல்வழிப்பாதையான பாப் அல் மாண்டெப் ஜலசந்தியைக் கைப்பற்றத் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசு வசம் இருந்த மொகா நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதன் மூலம், பாப் அல் மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 75 கிலோமீட்டர் தொலைவிற்குள் அவர்கள் முன்னேறியுள்ளனர்.
நள்ளிரவில் நடந்த கடுமையான தாக்குதல்களால் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஏமன் சர்வதேச அரசின் தலைமையகமான ஏடன் நகரை நோக்கி தப்பிச் சென்று கொண்டிருக்கின்றன. மொகா நகரை மட்டுமின்றி, செங்கடலில் உள்ள முக்கியத் தீவான ‘ஜுகார்’ (Zuqar) தீவையும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதற்குக் காரணியாக, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தாயிஸ், ஹுதைதா, மாரிப் உள்ளிட்ட பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் 64-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேலும் சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள காமிஸ் முஷைத், அப்ஹா மற்றும் ஜாசான் ஆகிய நகரங்கள் மீது ஹவுதிகள் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 73 பொதுமக்கள் காயமடைடைந்துள்ளதுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் சேதமடைந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் நடந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உதவியின்றி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு செங்கடல் பாதையையே முழுமையாக நம்பியிருந்தது. சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்குத் தடையில்லை என்று ஹவுதிகள் கூறினாலும், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த திடீர் மோதலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள சூழலில், ஏமன் பகுதிகளைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு அரபு மற்றும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
